tamilnadu

img

அவசரநிலையை எதிர்த்து போராடியவர் கருணாநிதி சென்னை கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் புகழாரம்

அம்பத்தூர், ஜூன் 5-அவசர நிலையை எதிர்த்து போராடியவர் கருணாநிதி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்கூறினார். அம்பத்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில் முன்னாள் தலைவர் கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “கருணாநிதி வரும் தலைமுறைக்கு தந்து சென்றது அறிவாயுதமா? போர்க்குணமா” என்ற தலைப்பில் சொல்லரங்கமும், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டமும் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே பகுதி செயலாளர் ஜோசப் சாமுவேல் தலைமையில் நடைபெற்றது. தெற்கு பகுதிசெயலாளர் டி.எஸ்.பி.ராஜகோபால் வரவேற்றார்.சொல்லரங்கத்தை துவக்கி வைத்து  கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:அவசர நிலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின. பேச்சுரிமை மறுக்கப்பட்ட போது, அதற்கெதிராக தீர்மானம் நிறைவேற்றினால் ஆட்சி கவிழும் என்ற நிலையிலும் கூட, ஜனநாயகத்தை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டேன் என தீர்மானத்தை நிறைவேற்றியவர் கருணாநிதி. தொடர் போராட்டத்தின் விளைவாக அவசர நிலை1977ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.அடித்தட்டு மக்கள் வாழ்வுக்காக உழைத்தவர் கருணாநிதி. மார்க்சிஸ்ட் கட்சிக்கும், திமுகவுக்கும் மாறுபட்ட கருத்து உண்டு. மாறுபட்ட கூட்டணியில் செயல்பட்டிருக்கிறோம். ஆனால் எல்லா அரசியல் இயக்கங்களோடும் ஒரு சுமூக உறவை பேணிக் காத்தார்,  கருணாநிதியின் மறைவு அவரது கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே இழப்பு. தமிழகத்தில் எப்படிமதவெறி, சாதி வெறி சக்திகள் தோற்கடிக்கப்பட்டார்களோ அதேபோல் நாடு முழுவதும் அவர்களை வீழ்த்த இந்நாளில் சபதமேற்போம்.இவ்வாறு அவர் பேசினார்.காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில்,எத்தனை மொழியை வேண்டுமானாலும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கற்றுக் கொள்ளலாம். ஆனால் எந்தமொழியையும் திணிக்கக் கூடாது என்றார்.பின்னர் நடைபெற்ற சொல்லரங்கத்திற்கு நாஞ்சில் சம்பத் நடுவராக இருந்தார். அறிவாயுதமே என பேரசிரியர்கள் புசி.கணேசன், மனோன்மணியம், போர்க்குணமே என பேராசிரியர்கள் மானசீகன், அன்பு ஆகியோர் வாதிட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.மூர்த்தி, மூத்த தலைவர் மாசிலாமணி, சிபிஎம் மாவட்டக் குழுஉறுப்பினர் சு.லெனின்சுந்தர்,பகுதிச் செயலாளர் சு.பால்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;